முற்போக்குச் சிந்தனையாளர் !
தோழர் ஜீவா என்று நாம் அறிந்த
ப.ஜீவானந்தம் அவர்களின்
பகுத்தறிவுச் சுயமரியாதைப்
பொதுவுடைமைப்
பாடல்கள் சில :
கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட
தோழர் மண்ணடி மாணிக்கம் என்பவரை
ஜீவா அழைத்துச் சென்றமைக்காக
ஊரார் அவரின் தந்தையாருக்குத்
தண்டம் (அபராதம்)விதித்தனர்.
அப்போது ஜீவா பாடிய பாடல்
"வாயற்ற நாய் கழுதை
மலம் தின்னும் பன்றியும்
வழியோடு செல்லலாமாம்
மனிதன் , நாம் சென்றிடில்
புனிதமற்றுத் தீட்டு
வந்துலகு மூழ்கிப் போமாம்.
சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக்
கொண்ட அவர் கடவுள்
பற்றிப் பாடிய பாடல் இது.
"கொள்ளைச் சிரிப்பு வருகுதே - குப்பன்
குழவிக்கல்லைச் சாமியென்று கும்பிட்டபோது.
பிள்ளைவரம் பெற்றிட வென்று - வள்ளி
பேரரசு வேப்பமரம் சுற்றியபோது.
கள்ளை மொந்தையாய்க் குடித்து - சுப்பன்
காட்டேரி ஆடு தென்று கத்தியபோது
சள்ளை தரும் பாவம் தொலைக்க - பொன்னி
சாக்கடையைத் தீர்த்த மென்று மூழ்கிய போது.
ஜாதி ஏற்றத் தாழ்வைப் பற்றி
இப்பாடலில் ஜீவா இப்படிப் பாடுகிறார்.
"நல்லாரை உழைப்போரைப் பறையர் என்றார் ,
நயவஞ்சமுடையோர் மேற்சாதி என்றார் ,
பொல்லாத கொடியவரை மன்ன ரென்றார் ,
பொய்யுரைத்த கயவர் தம்மை குருக்கள் என்றார் ,
சொல்லாரும் தாயினத்தை அடிமை என்றார் ,
சூது மிகும் ஆசாரம் சமயமென்றார் ,
இல்லாத பொய் வழியில் சென்றதாலே ,
இந்நாட்டார் அடிமை வாழ்வு எய்தினாரே.
மக்களின் வறுமை நிலயைக் குறித்து
ஜீவாவின் இந்தப் பாடல்
படிப்பவரின் உள்ளத்தை
உலுக்குகிறது.
"காலுக்குச் செருப்பு மில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை ,
பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா.
பாலின்றிப் பிள்ளையழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம் - என் தோழனே
வீடு மூச்சூடும் அழும்.
இந்த நிலையை மாற்றுவதற்கான
வழியை இப்படிக் கூறுகிறார் ஜீவா
இந்தப் பாடலில்
"ஒன்றுபட்டுப் போர் புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என் தோழனே.
இம்சை முறைகளெல்லாம்.
இப்படி அவர் பாடியும் பேசியும் கட்டமைக்க விரும்பிய சமுதாயம் இன்னும் மலரவில்லை.
இன்று தோழர் ப.ஜீவானந்தம்
அவர்களின் நினைவு நாள் 18,
ஜனவரி (1963)
-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தோழர் ஜீவாவைப் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் இன்றைய அரசியல் அரங்கில் காணாமற் போவிட்டார்கள் ! அதனால் தான் மதவெறியாளர்கள் ஆட்சியில் அமரும் அவலம் அரங்கேறுகிறது !
பதிலளிநீக்கு