name='description'/> தமிழ்க்கனி: செய்திச் சாரல்
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !
செய்திச் சாரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திச் சாரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஜூலை, 2021

மாண்பு மிகு மறத்தமிழன் - மன்னர்மன்னன் !

 

பாவேந்தர் பாரதிதாசனார் மகன், மாமனிதர் ,

மன்னர்_மன்னன் என்கிற கோபதி

அவர்கள்

நினைவு நாள் இன்று ஜூலை 6 , (மறைவு 6.7.2020)

பாவேந்தர்பாரதிதாசனின்‌ மக்கள் நால்வரில்

ஒரே மகன், மன்னர்மன்னன் !

 

மற்ற மூவரும் பெண்மக்கள்.பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர்,

தமிழ்,,ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் தெலுங்கு எனப் பன்மொழி

அறிந்த பன்மொழிப் புலவர் !

 

இதழாசிரியர், வானொலி நிலைய

எழுத்தாளர் , நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என

ஊடகத்துறையிலும்

முத்திரை பதித்தவர்

 

புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், பல்வேறு

நாடகங்களை தயாரித்து அளித்துள்ளார்.

இவர் 50க்கும் மேற்பட்ட நூல்களைஎழுதிய

தமிழறிஞரும் ஆவார்.

  

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தலைவராக இருந்துள்ள இவர்

தமிழ்ச்சங்கத்திற்குச்

சொந்தமாகக்  கட்டடம்  கட்டித்தந்தவர் !

 


தமிழக அரசின் உயரிய விருதுகளான திரு.வி.க விருது,  கலைமாமணி 

விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி,

கலைமாமணி விருது உள்ளிட்ட பல

விருதுகள் பெற்றவர்

மன்னர்‌மன்னன் !

 

இவரது தந்தை 'புரட்சிப் பாவேந்தர்'

பாரதிதாசனாரின் வாழ்க்கை வரலாற்றைக்.

கறுப்புக்குயிலின்  நெருப்புக்குரல்" என்ற தலைப்பில்

எழுதியவர் மன்னர் மன்னன் !

  

இது தமிழக அரசின்

சிறந்த நூலுக்கான பரிசையும் பெற்றுள்ளது.

தமது 14 அகவையிலேயே" முரசு" என்ற

புரட்சிகர ஏட்டை நடத்தியமைக்காகப்

பிரஞ்சிந்திய அரசின் தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டவர் !

 

இந்திய விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி,

மொழிப் போராட்டத்திலும் பங்கேற்றுச் சிறை

சென்றவர் இவர் !

  

தமிழறிஞர்கள்

பலருடன் தொடர்பு கொண்டு

தமிழ்ப் பணியாற்றியவர்

மன்னர்மன்னன் !

 

இவர் அரசியல் அரங்கிலும் , பெருந்தலைவர் காமராசர், பெரியார்,

பேரறிஞர்அண்ணா, கலைஞர்கருணாநிதி,

எம்.ஜி ‌ஆர் போன்றவர்களுடன்

நெருங்கிப் பழகியவர் !

  

கலைஞர்

ஆட்சிக் காலத்தில்தான்

பாவேந்தரின்_படைப்புகள்  அரசுடைமை

ஆக்கப்பட்டன !

 

இவரின் துணைவி

#சாவித்திரி_அம்மையார்

35 ஆண்டுகளுக்கு முன்பே

காலமாகிவிட்டார் !

  

திருவாளர்கள் செல்வம், பாரதி,

தென்னவன்

மற்றும் திருமதி அமுதவல்லி

ஆகியோர் இவரின்

மக்கட்செல்வங்கள் !

  

வாழ்நாள் முழுதும் தமிழுக்குத்

தொண்டு செய்த

மாமனிதர் மன்னார் மன்னன்

தமது 92 ஆம்

அகவையில் 6 - 7 - 2020இல்

தமிழுடன் கலந்தார் !

  

இவருக்கு இதுவரை சாகித்திய_அகாடமி பரிசு

வழங்காமல் தன் பெருமையை இழந்து நிற்கிறது.

இனியாவது இவரின் தமிழ்ப் படைப்புகளுக்குச்

சாகித்தியஅகடமி  பரிசு வழங்கிப்

பெருமைப்பட வேண்டும் !

  

இவரின்  படைப்புகள் அனைத்தும்

தமிழ்நாட்டரசினால்  நாட்டுடைமை ஆக்கப்பட

வேண்டும் !

  

இவருக்குப் புதுவையில்  நினைவாலயம்

அமைக்கப்பட வேண்டும்....என்பவை

தமிழார்வர்களின் வேண்டுகோள் !


--------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


சோம.நடராசன்,

ஆட்சியர்,

”துலாக்கோல்” முகநூல்.

[தி.ஆ:2052,ஆடவை (ஆனி) 22]

{06-07-2021

----------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

சங்க காலத்தில் கைம்மை நிலை !

பண்டைய பெண்டிர் கைம்மை நோற்றனரா ? 

----------------------------------------------------------------------------------------------------------

சங்ககாலத்தில் கைம்பெண்டிர் நிலை !


தமிழகத்தில் கணவனை இழந்த

பெண்டிர் கைம்மை மகளிர் ,

விதவையர், கைம்பெண்டிர்,

என அழைக்கப்பட்டனர்.


கைம்மை நிலை என்பது

சமுதாயத்தின் ஒருதார

மணமுறை

என்ற சமூக அமைப்பில்

உருவாக்கப்பட்டது.


கணவன் இறந்தால் மனைவியும்

அவனுடன் இறக்க வேண்டும்

என்றும்......

ஆனால் மனைவி இறந்தால்

கணவர் இறக்க வேண்டியதில்லை

என்றும் எழுதப்படாத சட்டம்

நடைமுறையில் இருந்தது.


கணவனை இழந்த

பெண்டிர் குறித்து

இளங்கோவடிகள், தமது

சிலப்பதிகார நூலில் இருவகைப்

பாடாகக் காட்டியுள்ளார்.


பாண்டியன் நெடுஞ்செழியன்

அரியணையில் இருந்தவாறே

கெடுக என் ஆயுள் என்று கூறி

உயிர்துறந்ததும் அரசி

கோப்பெருந்தேவியும்

" கணவனை இழந்தோர்க்குக்

காட்டுவது இல், என்று தன் உயிர்

துறந்து, அரசனின் உயிரைத்

தேடிச்சென்றனள்"என்றார்

இளங்கோவடிகள்.


ஆனால் .....

கோவலன் இறந்ததும் ,

கண்ணகி உயிர் துறக்கவில்லை.

உயிருடன் இருந்து பாண்டியன்

அவைக்குக் சென்று தன் கணவன்

கோவலன் கள்வனல்லன் என்று

வாதாடி, நீதியை நிலைநாட்டினாள்.


எனினும், சங்க இலக்கியங்கள்

கைம்பெண்கள் பற்றிக்

குறிப்பிடும்போது, அவர்கள்

கைம்மை நோன்பு

கடைப்பிடித்னர் என்று கூறுகின்றன.


நற்றிணை, புறநானூறு ஆகிய

இரு நூல்களில் மட்டுமே கைம்மை

பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.


கணவனை இழந்த பெண்களை,

ஆளில் பெண்டிர் (நற்.353)

கழிகல மகளிர் (புறம்,280)

பருத்திப்பெண்டிர் (புறம்.125)

தொடிகழி மகளிர் (புறம்.238)

கைம்மை (புறம்.125, 261)

படிவமகளிர் (நற்.273)

உயவற்மகளிர் (புறம்.246)

என்று அவர்கள் குறிப்பிடப்

படுகின்றனர்.


மனைவியை இழந்த ஆண்கள்

எங்ஙனம் வாழ வேண்டும்

என்ற வரைமுறை சங்க

இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.


மனைவியிழந்த ஆடவர்கள்

கைம்பெண்டிரைப் போன்று

தனித்தும், கைம்மைக்கோலம்(?)

பூண்டும் வாழவில்லை.


கணவனை இழந்தவர்கள்

கைம்மைத் துன்பம் நிறைந்த

வாழ்கையைவிட இறப்பதே

சாலச் சிறந்தது என்று

தனிச்சையாக முடிவெடுத்து

உயிர்துறந்தனர்

என்றும் அனுமானிக்கலாம்.


சங்க காலக் கைம்பெண்டிர்

மறுமணம் புரிந்துகொண்டனரா

என்பது குறித்து எந்தத் தகவலும்

சங்க இலக்கியங்களிள்

தென்படவில்லை.


கைம்பெண்கள் மறுமணம்

புரிந்துகொள்ள வேண்டும்

என்பதைத் தென்னகத்தில்

முதன்முதலாக வலியுறுத்தியவர்

பகுத்தறிவுப் பகலவன் #பெரியார்.


#பாவேந்தரும், கைப்பெண்டிரின்

மறுமணத்தை வலியுறுத்தி

ஏராளமான கவிதைகள்

வரைந்துள்ளார்.


இவர்களின் கனவைக் #கலைஞர்

தம் ஆட்சிக்காலத்தில்

நிறைவேற்றினார்.


டாக்டர் தருமாம்பாள் கைம்பெண்

மறுமணத்திட்டத்தை நடைமுறைப்

படுத்தினார்.


ஏராளமான கைம்பெண்கள்

வாழ்வில், பொட்டும் பூவும்

இல்லற வாழ்வும் பெற்று

இலங்குமாறு

மறுவாழ்வளித்தார் கலைஞர் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,.

சோம.நடராசன்,

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்,

”துலாக்கோல்” முகநூல்.

{14-04-2021}

-------------------------------------------------------------------------------------------------------------