name='description'/> தமிழ்க்கனி: ஏப்ரல் 2021
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

கெண்டை மீனும் கொக்கும் !

#தாமரையும், #சைவக்கொக்கும் !


"கொக்கு ! சைவக்கொக்கு !  - ஒரு கெண்டைமீனக் கண்டு

விரதம் முடிச்சிருச்சாம்" ஒரு திரைப்படப் பாடல் இது !


"ஓடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"

என்கிறது, ஒளவையின் மூதுரை ! (16)


"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து. (490)" இது #பேராசான் வாக்கு !


கொக்கும் மீனும் ஒன்றை ஒன்று ஏய்த்து வாழும் 

தன்மையதாய் இருந்தன என்று அறிகிறோம். இது குறித்து ஒரு 

சுவையான சங்கப் பாடல் ஒன்றைக் காண நேர்ந்தது !

பகிர்ந்து  கொள்கிறேன் !


கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து நீந்திவந்தபோது

அதற்காகவே காத்திருந்த கொக்கு கெண்டைமீனைக் 

கவ்வியது. எதிர்பாராதவிதமாகக் கொக்கின் கவ்வுதலிலிருந்து 

தப்பியது மீன் !


உயிர்பிழைத்த மீன் அச்ச உணர்வுடனேயே நீருள் நீந்திவந்தது.

நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் வெண்தாமரைமலரைக் 

கண்டு அதுவும் கொக்குதானோ என்று அஞ்சிவருந்தியது.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்“ என்பது 

போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனுக்கு 

தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது!


மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் வகையில்,

#குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. மேலும், இந்த கொக்கு 

- மீன் எடுத்துக்காட்டு மூலம் ஓர் அழகான அகவாழ்வியல்

நிகழ்வையும் உணர்த்துகிறது அப்பாடல் !


பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் , ஊடல் கொண்டிருந்த

தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத் 

தான்  பின்நின்றான்.பாணனைக் கண்ட தோழி

தலைவியின் சார்பாகஅவனைநோக்கி, “நின் பாணன்

பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே

எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி "#வாயில்_மறுத்தாள்"


"வாயில் மறுத்தல்"என்பது அகத்துறைகளுள் ஒன்றுதலைவன் 

பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடிஅவன் தவற்றை 

அவனுக்கு உணர்த்துவதாக அவனை தம் வீட்டுக்கு வர

அனுமதி மறுப்பாள் தலைவி. இதற்கு வாயில் மறுத்தல் என்று 

பெயர் !

இனி .....

அந்தக் குறுந்தொகைப்

பாடலைப் பார்ப்போம்.


குருகுகொளக் குளித்த கெண்டை யயல

துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி யூர

ஒருநின் பாணன் பொய்ய னாக

உள்ள பாண ரெல்லாம்

கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே !


(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்)

தோழி கூற்று (மருதம் - ஊடல்)


அதாவது.......

குருகிற்கு (கொக்கிற்கு) அஞ்சிய கெண்டை அக்குருகைப் 

போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை 

இல்லாததுமாகிய தாமரை முகையையும் கண்டு

அஞ்சினாற்போல,,,,,,,,


நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த

மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனர்  

என்பது குறிப்பு !


இப்பாடலைப் போலவே நாரையிடம் தப்பிய இறாமீன்

தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக

நற்றிணை (211) பாடலும் சுட்டிச் செல்கிறது !


பாடல்வழி அறியலாகும் கருத்து:-


கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனின் செயல் 

பேதமை நிமித்தம் சிரிப்பை  (நகை) தோற்றுவிப்பதாக  

உள்ளது.  கொக்கிடம்  மீண்ட கெண்டைமீன் தாமரையைக் 

கண்டு கொக்கோ என்று அஞ்சுவதுபோலவே,  

தலைவனுக்காகப்  பொய்சொல்லும் பாணரைக் கண்ட 

மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள்

என்று எண்ணுவதாகப் புலவர்கள் கூறுவதுஆகியன  ஒப்பு 

நோக்கி இன்புறத்தக்கன ! 


மனித உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத 

மீனைப்போன்றஉயிரினங்களின்  மனவுணர்வையும்  

நகைச்சுவையுணர்வோடு சிந்தித்த சங்கப் 

புலவர்களின் உளவியல் அறிவு 

வியக்கத்தக்கதாக உள்ளது.  இது ஒரு புறம் இருக்க........

அரசியல் உலகில்

#தாமரையானதுசைவக் கொக்கு வேடம் பூண்டுஅப்பாவி 

மீன்களைக் கொத்தித் தின்றுவிட எல்லா வகையான

முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது !


அப்பாவி மீன்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த 

சைவக் கொக்குத் தாமரையை வாடி வதக்கி மண்ணோடு 

மண்ணாக்கிட வேண்டும் !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

சோம.நடராசன்,

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்,

துலக்கோல் முகநூல்.

[தி.பி.2052,மேழம் (சித்திரை) 05]

{18-04-2021}

-------------------------------------------------------------------------------------------------------------


ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

சங்க காலத்தில் கைம்மை நிலை !

பண்டைய பெண்டிர் கைம்மை நோற்றனரா ? 

----------------------------------------------------------------------------------------------------------

சங்ககாலத்தில் கைம்பெண்டிர் நிலை !


தமிழகத்தில் கணவனை இழந்த

பெண்டிர் கைம்மை மகளிர் ,

விதவையர், கைம்பெண்டிர்,

என அழைக்கப்பட்டனர்.


கைம்மை நிலை என்பது

சமுதாயத்தின் ஒருதார

மணமுறை

என்ற சமூக அமைப்பில்

உருவாக்கப்பட்டது.


கணவன் இறந்தால் மனைவியும்

அவனுடன் இறக்க வேண்டும்

என்றும்......

ஆனால் மனைவி இறந்தால்

கணவர் இறக்க வேண்டியதில்லை

என்றும் எழுதப்படாத சட்டம்

நடைமுறையில் இருந்தது.


கணவனை இழந்த

பெண்டிர் குறித்து

இளங்கோவடிகள், தமது

சிலப்பதிகார நூலில் இருவகைப்

பாடாகக் காட்டியுள்ளார்.


பாண்டியன் நெடுஞ்செழியன்

அரியணையில் இருந்தவாறே

கெடுக என் ஆயுள் என்று கூறி

உயிர்துறந்ததும் அரசி

கோப்பெருந்தேவியும்

" கணவனை இழந்தோர்க்குக்

காட்டுவது இல், என்று தன் உயிர்

துறந்து, அரசனின் உயிரைத்

தேடிச்சென்றனள்"என்றார்

இளங்கோவடிகள்.


ஆனால் .....

கோவலன் இறந்ததும் ,

கண்ணகி உயிர் துறக்கவில்லை.

உயிருடன் இருந்து பாண்டியன்

அவைக்குக் சென்று தன் கணவன்

கோவலன் கள்வனல்லன் என்று

வாதாடி, நீதியை நிலைநாட்டினாள்.


எனினும், சங்க இலக்கியங்கள்

கைம்பெண்கள் பற்றிக்

குறிப்பிடும்போது, அவர்கள்

கைம்மை நோன்பு

கடைப்பிடித்னர் என்று கூறுகின்றன.


நற்றிணை, புறநானூறு ஆகிய

இரு நூல்களில் மட்டுமே கைம்மை

பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.


கணவனை இழந்த பெண்களை,

ஆளில் பெண்டிர் (நற்.353)

கழிகல மகளிர் (புறம்,280)

பருத்திப்பெண்டிர் (புறம்.125)

தொடிகழி மகளிர் (புறம்.238)

கைம்மை (புறம்.125, 261)

படிவமகளிர் (நற்.273)

உயவற்மகளிர் (புறம்.246)

என்று அவர்கள் குறிப்பிடப்

படுகின்றனர்.


மனைவியை இழந்த ஆண்கள்

எங்ஙனம் வாழ வேண்டும்

என்ற வரைமுறை சங்க

இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.


மனைவியிழந்த ஆடவர்கள்

கைம்பெண்டிரைப் போன்று

தனித்தும், கைம்மைக்கோலம்(?)

பூண்டும் வாழவில்லை.


கணவனை இழந்தவர்கள்

கைம்மைத் துன்பம் நிறைந்த

வாழ்கையைவிட இறப்பதே

சாலச் சிறந்தது என்று

தனிச்சையாக முடிவெடுத்து

உயிர்துறந்தனர்

என்றும் அனுமானிக்கலாம்.


சங்க காலக் கைம்பெண்டிர்

மறுமணம் புரிந்துகொண்டனரா

என்பது குறித்து எந்தத் தகவலும்

சங்க இலக்கியங்களிள்

தென்படவில்லை.


கைம்பெண்கள் மறுமணம்

புரிந்துகொள்ள வேண்டும்

என்பதைத் தென்னகத்தில்

முதன்முதலாக வலியுறுத்தியவர்

பகுத்தறிவுப் பகலவன் #பெரியார்.


#பாவேந்தரும், கைப்பெண்டிரின்

மறுமணத்தை வலியுறுத்தி

ஏராளமான கவிதைகள்

வரைந்துள்ளார்.


இவர்களின் கனவைக் #கலைஞர்

தம் ஆட்சிக்காலத்தில்

நிறைவேற்றினார்.


டாக்டர் தருமாம்பாள் கைம்பெண்

மறுமணத்திட்டத்தை நடைமுறைப்

படுத்தினார்.


ஏராளமான கைம்பெண்கள்

வாழ்வில், பொட்டும் பூவும்

இல்லற வாழ்வும் பெற்று

இலங்குமாறு

மறுவாழ்வளித்தார் கலைஞர் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,.

சோம.நடராசன்,

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்,

”துலாக்கோல்” முகநூல்.

{14-04-2021}

-------------------------------------------------------------------------------------------------------------


சனி, 17 ஏப்ரல், 2021

வான்குருவியின் கூடு, வல்லரக்கு, தொல்கறையான் !

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு !

-----------------------------------------------------------------------------------------------------------------

ஒளவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகிய புலவர் பெருமக்கள் சமகாலத்தவர்கள் என்றும், , , , ,

சோழமன்னன் குலோத்துங்கனின் அரசவையில் அங்கம் வகித்தவர்கள் என்றும் நம்பப் படுகிறது !


ஆனால், கல்வியில் பெரியவர்.

கம்பனே என்றும்,

#இராமகாதை எனும் மகா காவியம் படைத்த சிறப்பிற்குரியவர் என்றும்,,,,

கம்பனுக்கு நிகரான புலவர் எவரும் இல்லை என்றும்,,,,,

தன்னுடைய அரசவையில் கம்பனைப் புகழ்ந்து பேசினான் #சோழமன்னன்.

அவையில் இருந்த #ஒளவை_மூதாட்டி இதை ஏற்கவில்லை !


"பெரிய பெரிய காவியங்கள் படைப்பதுதான் புலமைக்கு அளவுகோல் என்று கூறுவது தவறு.

"அவரவர்க்கு எவை எவை எளிதோ அதை அவர்கள் செய்வார்கள்.

"எல்லார்க்கும் ஒவ்வொரு செயல் புரிவது எளிது!

ஆகவே, கம்பரை வானளாவப் புகழ்வது ஏற்புடையதன்று"

என்றார் ஒளவை மூதாட்டி !


இது அளவயில் இருந்த சோழஅரசன், கம்பர் ஆகியோரை சினம் கொள்ளச் செய்தது.

இதைக் குறிப்பால் உணர்ந்த ஒளவை மூதாட்டி ,

"கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

என்று

உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள் - மெத்த

வெறும் பந்தயம் கூற வேண்டாம் புலவீர்

எறும்பும் தன் கையால் எண்சான் "

என்றார் ஒளவை மூதாட்டி .


ஒளவையார் பாடிய பாட்டும், பேசிய பேச்சும் சோழனுக்கு பெரும் வருத்தத்தினைத் தந்தது.

கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண் டிருந்தவன் சோழன்.

தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு வெகுண்டான், கலங்கினான்.


ஆனால் , பழித்துக் கூறியவரோ நாடனைத்தும் கொண்டாடப்படும் ஒளவையார்,

அதனால் அவரைச் சினந்து கொள்ளவும் முடியவில்லை. அவரைத் தெளிவுபடுத்தவே அவன் விரும்பினான்.

"கம்பர் எனக்கு வேண்டியவர்; இதில் ஐயமில்லை. ஆனால், அவரைப் பாராட்டியது அவருடைய புலமை நுணுக்கத்தை அறிந்து உரைத்ததே ஆகும்.


அவரைப் போலப் பெரிதான காவிய நூலைச் செய்து சிறப்புற்றவர் வேறு யார்தாம் இருக்கிறார்கள்?" என்றான் சோழன்.

கம்பருக்கு ஆதரவாகவும் அதேசமயம் ஒளவையார் பெருங்காவியம் எதுவும் பாடவில்லை என்பதைச் சுட்டியதாகவும் அவன் பேச்சு அமைந்தது.

அமைதியுடன் அதனைச் செவிமடுத்த ஒளவையார்.

"சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய். அதனைப்போல எவராலாவது ஒரு கூடு கட்ட முடியுமா? குளவிகள் கட்டும் வலிய அரக்குக் கூட்டினைப்போல எவராலாவது செய்வதற்கு இயலுமா?


பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது !

தேனீக்கள் கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பு நுட்பம் விளங்குகிறது!

சிலந்தியின் வலையைப்போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ?

இவற்றை யாராலுமே செய்யவியலாதுதான். அதனால், அவை தான் தொழில் நுட்பத்தில் தலைசிறந்தவை என்று பாராட்டலாமோ?


அததற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.

அதனைப்

போலவேதான் கவிதையும்.

ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும்.

கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால்,,,,

வெண்பாவில் #புகழேந்தியார் புலியைப்போல் இருக்கிறார்,,,,,

கோவை, உலா அந்தாதியில் நம் #ஒட்டக்கூத்தர் மகாவல்லவர்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் வல்லவர்களாக உள்ளனர்.


நான் பெருங்காவியம் எதுவும் பாடவில்லை.

ஆனல், என்னுடைய சிறு சிறு அற நூல்களைக் காலங்கடந்தும், ஒவ்வொரு சிறாரும் கற்பர் பயனடைவர்.

இலக்கண இலக்கியங் கற்றோரே, கம்பன் கவியில் திளைக்க இயலும்,,,,


அந்தந்தத் துறையில் உள்ள வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு.

"அஃதல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக்கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது.

அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு.


ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்யவியலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும்.

இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்பு.

பாராட்டுவதுதான் அரசர்க்கு அழகுஎன்றார்.


வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.


"தூக்கணாங்குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக" என்பது விளக்கினார் மூதாட்டி, ஒளவையார்


ஒளவையாரின் பாடற்கருத்தினைக் கேட்ட, அறங்கூர் புலவர் அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் அதனை மறுக்க முடியவில்லை.

தான் கம்பர் மீது வளர்த்துக் கொண்ட அளவற்ற அன்புதான், அவரை அளவுக்கு மீறிப் போற்றுமாறு செய்தது என்பதனைச் சோழனும் உணர்ந்தான்.


அதனால் புலவர்கள் பலர் புண்பட்டிருப்பர் என்பதனையும், தன் மீதுள்ள அச்சத்தாலேயே அதுவரை ஏதும் கூறாதிருந்திருக்க வேண்டும் என்பதையும், அதன்பின் அவன் தெரிந்து கொண்டான்.

ஆனால், அச்சமின்றி அதனை எடுத்துரைத்துத் தன்னைத்


தெளிவுபெறச் செய்த ஒளவை முதாட்டியை வணங்கி அவருக்குச் சிறப்புச் செய்தான் சோழமன்னன்.

(இது வரலாற்று நிகழ்வன்று.கற்பனை மிகுந்த புனைவு. சுவை கூட்டிப் பதிவு செய்துள்ளேன்.

சுவைப்பதும், விமர்சிப்பதும் உங்கள் உரிமை)

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


சோம.நடராசன்,

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்.

{11-04-2021}

 ------------------------------------------------------------------------------------------------------------