#தாமரையும், #சைவக்கொக்கும் !
"கொக்கு ! சைவக்கொக்கு ! - ஒரு கெண்டைமீனக் கண்டு
விரதம் முடிச்சிருச்சாம்" ஒரு திரைப்படப் பாடல் இது !
"ஓடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"
என்கிறது, ஒளவையின்
மூதுரை ! (16)
"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. (490)" இது #பேராசான் வாக்கு !
கொக்கும் மீனும் ஒன்றை ஒன்று ஏய்த்து வாழும்
தன்மையதாய் இருந்தன என்று அறிகிறோம். இது குறித்து ஒரு
சுவையான சங்கப் பாடல் ஒன்றைக் காண நேர்ந்தது !
பகிர்ந்து கொள்கிறேன் !
கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து நீந்திவந்தபோது
அதற்காகவே காத்திருந்த கொக்கு கெண்டைமீனைக்
கவ்வியது. எதிர்பாராதவிதமாகக் கொக்கின் கவ்வுதலிலிருந்து
தப்பியது மீன் !
உயிர்பிழைத்த மீன் அச்ச உணர்வுடனேயே நீருள் நீந்திவந்தது.
நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் வெண்தாமரைமலரைக்
கண்டு அதுவும் கொக்குதானோ என்று அஞ்சிவருந்தியது.
“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்“ என்பது
போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனுக்கு
தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது!
மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் வகையில்,
#குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. மேலும், இந்த கொக்கு
- மீன் எடுத்துக்காட்டு மூலம் ஓர் அழகான அகவாழ்வியல்
நிகழ்வையும் உணர்த்துகிறது அப்பாடல் !
பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் , ஊடல் கொண்டிருந்த
தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத்
தான் பின்நின்றான்.பாணனைக் கண்ட தோழி
தலைவியின் சார்பாக, அவனைநோக்கி, “நின் பாணன்
பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே
எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி "#வாயில்_மறுத்தாள்"
"வாயில் மறுத்தல்"என்பது அகத்துறைகளுள் ஒன்றுதலைவன்
பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடிஅவன் தவற்றை
அவனுக்கு உணர்த்துவதாக அவனை தம் வீட்டுக்கு வர
அனுமதி மறுப்பாள் தலைவி. இதற்கு வாயில் மறுத்தல் என்று
பெயர் !
இனி .....
அந்தக் குறுந்தொகைப்
பாடலைப் பார்ப்போம்.
குருகுகொளக் குளித்த கெண்டை யயல
துருகெழு தாமரை
வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி
யூர
ஒருநின் பாணன் பொய்ய
னாக
உள்ள பாண ரெல்லாம்
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே !
(குறுந்தொகை
-127.ஓரம்போகியார். மருதம்)
தோழி கூற்று (மருதம் -
ஊடல்)
அதாவது.......
குருகிற்கு (கொக்கிற்கு) அஞ்சிய கெண்டை அக்குருகைப்
போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை
இல்லாததுமாகிய தாமரை முகையையும் கண்டு
அஞ்சினாற்போல,,,,,,,,
நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த
மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனர்
என்பது குறிப்பு !
இப்பாடலைப் போலவே நாரையிடம் தப்பிய இறாமீன்
தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக
நற்றிணை (211) பாடலும்
சுட்டிச் செல்கிறது !
பாடல்வழி அறியலாகும் கருத்து:-
கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனின் செயல்
பேதமை நிமித்தம் சிரிப்பை (நகை) தோற்றுவிப்பதாக
உள்ளது. கொக்கிடம் மீண்ட கெண்டைமீன் தாமரையைக்
கண்டு கொக்கோ என்று அஞ்சுவதுபோலவே,
தலைவனுக்காகப் பொய்சொல்லும் பாணரைக் கண்ட
மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள்
என்று எண்ணுவதாகப் புலவர்கள் கூறுவது, ஆகியன ஒப்பு
நோக்கி இன்புறத்தக்கன !
மனித உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத
மீனைப்போன்றஉயிரினங்களின் மனவுணர்வையும்
நகைச்சுவையுணர்வோடு சிந்தித்த சங்கப்
புலவர்களின் உளவியல் அறிவு
வியக்கத்தக்கதாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க........
அரசியல் உலகில்,
#தாமரையானது, சைவக் கொக்கு வேடம் பூண்டு, அப்பாவி
மீன்களைக் கொத்தித் தின்றுவிட எல்லா வகையான
முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது !
அப்பாவி மீன்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த
சைவக் கொக்குத் தாமரையை வாடி வதக்கி மண்ணோடு
மண்ணாக்கிட வேண்டும் !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
[somanatarajan17@gmail.com]
ஆட்சியர்,
துலக்கோல் முகநூல்.
[தி.பி.2052,மேழம் (சித்திரை) 05]
{18-04-2021}
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக