name='description'/> தமிழ்க்கனி: இலக்கியம்
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜனவரி, 2021

கன்றாமை வேண்டும் ! - நான்மணிக் கடிகை !



 நான்மணிக் கடிகை!

பாடல்(13) கன்றாமை வேண்டும் கடிய !
முற்றிலும் வெண்பாக்களால் யாக்கப் பெற்ற நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம்106 செய்யுள்கள் உள்ளன. கடைச்சங்க காலத்ததான இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு வகையைச் சார்ந்தது! இதிலிருந்து ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------
பாடல்: எண் (13).
---------------------------------------------------------------------------------
கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த
நன்றியை நன்றாக் கொளல்வேண்டும் – என்றும்
விடல்வேண்டுந் தங்கண் வெகுளி அடல்வேண்டும்
ஆக்கஞ் சிதைக்கும் வினை.
---------------------------------------------------------------------------------
பொருள்:
-------------
பிறர் செய்கின்ற அஞ்சத்தக்கக, கடுஞ் செயல்களை நினைந்து நினைந்து மனதில் கறுவாமை (மன வயிரம் கொள்ளாதிருத்தல்) வேண்டும்!

பிறர் செய்யும் நன்மைகளை மறவாமல் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் !

தம்மிடம் உண்டாகும் பெரும் சினத்தை வளரவிடாமல் மனதைவிட்டு நீக்குதல் வேண்டும்!

அதுபோல், முற்போக்கான பயன் தரும் செயல்களைக் கெடுத்து அழித்துவிடும் தவறான முனைவுகளை முற்றாக ஒழித்துவிட வேண்டும் !
----------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------
கன்றாமை = நினைத்து நினைத்துப் புழுங்கி மன வயிரம் கொள்ளாதிருத்தல்; கடிய = பிறர் செய்யும் அஞ்சத்தக்க கடுஞ் செயல்களை ; நன்றாக் கொளல் = மறவாமல் நினைவில் இருத்துதல்; விடல் வேண்டும் = விட்டுவிட வேண்டும்; வெகுளி= பெருஞ்சினம்; அடல் வேண்டும் = ஒழித்தல் வேண்டும்; ஆக்கம் = முற்போக்கான பயன் தரும் செயல்கள்.
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
சோம.நடராசன்,
கூடுதல் ஆட்சியர்,
வேலை வாய்ப்பு பயிற்சித் துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் இணையம்,
[தி.ஆ:2052,சுறவம் (தை),06]
{19-01-2021}
--------------------------------------------------------------------------------------