name='description'/> தமிழ்க்கனி: வரலாறு
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஜூலை, 2021

தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார் மறைவு !

 

தமிழ்க் கடல், முதுமுனைவர் இரா. இளங்குமரனார்

 இன்று

25, ஜூலை, 2021 இல் 

இயற்கை எய்தினார் !


புலவர் இரா. இளங்குமரனார் தொடக்கத்தில் பள்ளி 

ஆசிரியராகப் பணியாற்றியவர்,

பின்னர் நூலாசிரியர், பாவலர்

பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர்

இதழாசிரியர், உரையாளர் எனப்

 பல பணிகளையும் 

செய்துள்ளார் !

 

இளங்குமரனார் திருநெல்வேலி மாவட்டம் 

வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 

சனவரி 30, 1927 அன்று

 பிறந்தார் !


தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார்.

இளங்குமரனார் ஏப்ரல் 8, 1946 முதல் 

ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் தனியே

தமிழ் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் 

வழியாக 1951 ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் 

முதல் வகுப்பில் 

வெற்றி பெற்றார்  !

  

பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் 

பாடலியற்றும் திறனும் பெற்றிருந்த இவர்

 இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் 1958 ஆம்

 ஆண்டு மதுரை 

அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது !



இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும்

திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்னும் இவரது நூலை 1963- 

ஆம் ஆண்டு நேரு

 வெளியிட்டார்.

 

சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் இவரது 

நூலை 2003- ஆம் ஆண்டு 

அப்துல் கலாம் வெளியிட்டார்.

  

இவருடைய நூல்கள் மதுரை பாரதி புத்தக நிலையம்,

திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த

 நூற்பதிப்புக்கழகம், சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் 

ஆகியவற்றின் வாயிலாக 

வெளிவந்தன.


இளங்குமரனார் நூல்கள் யாவும் இப்பொழுது கோ. இளவழகன் 

அவர்களின் தமிழ்மண் பதிப்பகம் வழியாக 

மறுபதிப்பும் செம்பதிப்புமாக

 வெளிவந்துள்ளன.

 

ர் பெற் விருதுள்

 

2012 பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் 

விருது, எஸ். ஆர். எம்.

 பல்கலைக்கழகம் !

 

பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு முதுமுனைவர்

 (D.Lit) பட்டம்

 வழங்கியுள்ளது !

 

பல ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தாலும் 

இவர் விரும்பிச் செய்வது நூலாக்கப் 

பணிகளேயாகும் !

 

பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர்,

மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர்,தேர்வுக்குழு 

அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை 

வகித்துத்துள்ளார்.

 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் 

அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து 

பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற 

தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப்

 போற்றி மதித்தவர்கள்.

தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் 

தொடர்ந்து குரல் கொடுத்து

 வந்தவர்.

  

திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் 

தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் 

திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் 

ஆகியவற்றை நிறுவினார்.

 

தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் 

திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும வந்தார்.

தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் 

பல சிறப்புப் பரிசில்கள்

விருதுகளை வழங்கியுள்ளது.

 

தூயதமிழறிஞர் என்பதால், இவருக்கு சாகித்திய அகாதமி விருதோ

ஞானபீட விருதோ அளிக்கப்படவில்லை.

 

ஆனால் உண்மைத்தமிழர்கள் உள்ளத்தில் பீடம் அமைத்து விட்டுத் 

தமது 95 ஆம் அகவையில், 25 -7 - 20 21 இல் 

தமிழுடன் கலந்துவிட்டார்.

 

வாழ்க, வளர்க இளங்குமரனாரின் புகழ் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

சோம.நடராசன்,

ஆட்சியர்,

தமிழ்க் கனி வலைப்பூ

[தி.ஆ; 2052, கடகம் (ஆடி) 10]

{26-07-2021}

--------------------------------------------------------------------------------

தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார்


வெள்ளி, 9 ஜூலை, 2021

தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி !

 

தமிழ் வரலாற்றுப் பேரறிஞர்

மயிலை சீனி. வேங்கடசாமி

நினைவுநாள் இன்று

ஜூலை 18 (1980) !

  

மயிலை சீனி . வேங்கடசாமி

தமிழறிஞரும், எழுத்தாளருமாவார்.

சிறப்புமிக்க தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை

எழுதிய வலாற்றுப்பேரறிஞரும் ஆவர்.

 

 

வேங்கடசாமி சென்னை, மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார்.

அவரதுதந்தை ஒரு சித்த மருத்துவர்.

வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார்.

 

 

இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர்.

திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர்.

 

 

வேங்கடசாமி தமது அண்ணார் கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம்பிள்ளை, பண்டிதசற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார்.

 

 

பின்னர்  நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார்.

 

 

ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார்.

 

 

பின்னர்ஆசிரியர்பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.


தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார்.

 

 

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார்.

 

 

தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார்.

 

 

கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார்.

இந்துசமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத

சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார்.

 

 

இருமுறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

வேங்கடசாமியின் தமிழ்ப்பணியை பாவேந்தர்பாரதிதாசன் பின்வருமாறு பாராட்டியுள்ளார்:

 

 

"தமிழையே வணிகமாக்கித்

தன்வீடும் மக்கள் சுற்றம்

தமிழிலே பிழைப்பதற்கும்

தலைமுறை தலைமுறைக்குத்

தமிழ் முதலாக்கிக் கொண்ட

பல்கலைத்தலைவன் எல்லாம்

தமிழ்ச் சீனி வேங்கடத்தின்

கால்தூசும் பெறாதார் என்பேன்

  

2000 ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி. வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியது.

 

இவர் படைத்த அந்நூல்களின் தொகுப்பு இங்கே உங்கள் பார்வைக்கு :

*கிறித்துவமும் தமிழும்

*பௌத்தமும் தமிழும்

*சமணமும் தமிழும்

*மகாபலிபுரத்து ஜைன சிற்பம்

*இறையனார் களவியல் (ஆராய்ச்சி)

*பௌத்தக் கதைகள்

*இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்

*மகேந்திரவர்மன்

*நரசிம்மவர்மன்

*மூன்றாம் நந்திவர்மன்

*புத்த ஜாதகக் கதைகள்

*அஞ்சிறைத்தும்பி

*கௌதம புத்தர்

*மறைந்து போன தமிழ் நூல்கள்

*சாசனச் செய்யுள் மஞ்சரி

*மனோன்மணீய ஆராய்ச்சியும் உரையும்

*பழங்காலத் தமிழ் வாணிகம்

*கொங்கு நாட்டு வரலாறு

*களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

*இசைவாணர் கதைகள்

*உணவு நூல்

*துளுவ நாட்டு வரலாறு

*சமயங்கள் வளர்த்த தமிழ்

*சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்

*சேரன் செங்குட்டுவன்

*19ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்

*சங்க காலச் சேர சோழ பாண்டியர்

*சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்

*நுண் கலைகள்

*தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

*சிறுபாணன் சென்ற பெருவழி

*மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழி பெயர்ப்பு)

*பழந்தமிழும் பல்வகைச் சமயமும்

மற்றும் ஏராளமான ஆய்வுக் கூட்டுரைகள் எழுதியுள்ளார்.

 

 

தமிழுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த தமிழ்ப் பேரறிஞர் 

சீனி வேங்கடசாமிப் பெருந்தகை தமது 80 ஆம் அகவையில் தமிழுடன் 

கலந்தார்.

 

 

அவர் புகழ் வாழ்த்தி வணங்கிப் போற்றி வணங்குவோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

சோம. நடராசன்,

ஆட்சியர்,

”துலாக்கோல்” முகநூல்

[தி.ஆ; 2052, ஆடவை (ஆனி) 24]

{08-07-2021}

 

திங்கள், 25 ஜனவரி, 2021

சிலம்பொலி சு.செல்லப்பன் !

 சிவியாம்பாளையச்  செந்தமிழன் !


சிலம்பொலி சி.சு. செல்லப்பனார் பிறந்த நாள் இன்று ,22 ஜனவரி !

-------------------------------------------------------------------------------------------------

சிலம்பொலி செல்லப்பன் என்று அறியப்பெற்ற நாமக்கல் மாவட்டம் 

சிவியாம்பாளையம் சுப்பராயன் செல்லப்பன் சிறந்த தமிழறிஞரும்

சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். நாமக்கல் 

மாவட்டம் சிவியாம்பாளையம் எனும் ஊரில்  சுப்பராயன் - 

பழனியம்மாள் இணையருக்கு மகனாக 22,டிசம்பர் 1929 –இல் 

பிறந்தவர் !

 

கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் இவர் !


பின்னர் அவர் வகித்த பதவிகள் :

 

(01) .#மாவட்டக்கல்வி  அலுவலர்.

(02) .இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு #உதவி அலுவலர் 1968.

(03) .தமிழ் வளர்ச்சித் துறை  இயக்குநர்

(04) .உலகத் தமிழாராய்ச்சி நிறுவன  இயக்குநர்

(05) .தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப்  பதிவாளர்.

(06) .தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைப்

        பரிந்துரைக்கும் குழுவின்  தலைவர் 1999.

 

இவர் தலைசிறந்த சொற்பொழிவாளர். கேட்டார்ப் பிணிக்கும் 

தகையைவாய், கேளாரும் வேட்ப மொழிகின்ற

ஆற்றொழுக்கான நடையில் இவரின் சொற்பொழிவுகள் 

அமைந்திருக்கும்.

 

சிலப்பதிகாரத்தில் துறைபோகிய ஆய்வுரை நல்குவார்.

இதைத் கண்டு இவருக்கு ,"சிலம்பொலி "என்ற பட்டத்தை

சொல்லின்செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை சூட்டினார்.

 

சிலம்பொலியார் சிறந்த எழுத்தாளரும் ஆவார்.*சிலம்பொலி,

பெருங்கதைஆராய்ச்சி, சங்க இலக்கியத்தேன் உட்படப் பல

நூல்களை எழுதியிருக்கிறார்.

 

இவர் எழுதிய நூல்களின் தொகுப்பு :-

 

(01). சிலம்பொலி (1975)

(02). சங்க இலக்கியத் தேன்

        (மூன்று தொகுதிகள், 1996)

(03). நல்ல குறுந்தொகையில் நானிலம், 1959.

(04). மூன்றும் நான்கும் (திரிகடுகம் ,

        நான்மணிக்கடிகை தெளிவுரை), 1980.

(05) இளங்கோ அடிகள் அருளிய

        சிலப்பதிகாரம் (மூலமும் தெளிவுரையும்), 1994.

(06) மணிமேகலை (மூலமும் தெளிவுரையும்), 1998.

(07) நாலடியார் (மூலமும் தெளிவுரையும்), 2000

(08) மலர் நீட்டம் (திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்), 2003.

(09) சிலப்பதிகாரச் சிந்தனைகள், 2011.

(10) கணிதச் செல்வம் (எட்டு நூல்கள்), 1964-1966

(11) பாரதிதாசன் ஒர் உலகக் கவிஞர், 1983.

(12) வளரும் தமிழ், 1987.

(13) காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், 1989 ( சென்னை , கம்பன்          கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு)

(14.) நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), 2004.

(15) .இலக்கியச் சிந்தனைகள், 2004.

(16) .பெருங்கதை ஆராய்ச்சி, 2006

(17) .இக்காலத் தமிழ்க் காப்பியங்கள், 2004.

(18) .இலக்கியம் ஒரு பூக்காடு, 2004.

(19) .பூங்காவில் புதுமணம், 2009.

(20) .இசுலாமிய இலக்கியச் சாரல், 2011.

(21) .நான் ஒரு தும்பி, 2004.

(22) .திருக்குறள் இன்பத்துப்பால் (மூலமும் உரையும்), 2015.

(23) .பெருங்குணத்துக் கண்ணகி, 2008.

(24).செம்மொழித்தமிழ் அகப்பொருள் களஞ்சியம்: (14 தொகுதிகள்)

       2016.

(25).சிலம்பொலியார் பார்வையில் #முத்தமிழ் #அறிஞர் #கலைஞர்

     , 2008.

 

இவர் பெற்ற பட்டங்களும் விருதுகளும் :-

 

(01). சிலம்பொலி பட்டம் (1954 இல் இரா. பி. சேதுப்பிள்ளை வழங்கியது)

(02). #பாவேந்தர் #பாரதிதாசன் விருது

(03) .சிலம்பொலியாரின் அணிந்துரைகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித்

        துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு

        எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

(04) .கம்பன் புகழ் விருது, 2013 இல் வழங்கப்பட்டது.

 

தமிழ் நாட்டரசின் கலைமாமணி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

வாழ்நாளெல்லாம் தமிழுக்காக , தமிழாய் வாழ்ந்த இவர் தனது 90-

ஆம் அகவையில் 6-4- 2019 இல் தமிழுடன் கலந்தார் !

 

வாழ்க ! வளர்க ! சிலம்பொலி செல்லப்பனார் புகழ் !

 

------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை

சோம. நடராசன்

(somanatarajan17@gmail.com)

கூடுதல் ஆட்சியர்,

வே.வா..து..பெ..இணையம்.

[தி.பி.2052,சுறவம் (தை0 09]

{22-01-2021}
------------------------------------------------------------------------------------------------