name='description'/> தமிழ்க்கனி
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

சங்க காலத்தில் கைம்மை நிலை !

பண்டைய பெண்டிர் கைம்மை நோற்றனரா ? 

----------------------------------------------------------------------------------------------------------

சங்ககாலத்தில் கைம்பெண்டிர் நிலை !


தமிழகத்தில் கணவனை இழந்த

பெண்டிர் கைம்மை மகளிர் ,

விதவையர், கைம்பெண்டிர்,

என அழைக்கப்பட்டனர்.


கைம்மை நிலை என்பது

சமுதாயத்தின் ஒருதார

மணமுறை

என்ற சமூக அமைப்பில்

உருவாக்கப்பட்டது.


கணவன் இறந்தால் மனைவியும்

அவனுடன் இறக்க வேண்டும்

என்றும்......

ஆனால் மனைவி இறந்தால்

கணவர் இறக்க வேண்டியதில்லை

என்றும் எழுதப்படாத சட்டம்

நடைமுறையில் இருந்தது.


கணவனை இழந்த

பெண்டிர் குறித்து

இளங்கோவடிகள், தமது

சிலப்பதிகார நூலில் இருவகைப்

பாடாகக் காட்டியுள்ளார்.


பாண்டியன் நெடுஞ்செழியன்

அரியணையில் இருந்தவாறே

கெடுக என் ஆயுள் என்று கூறி

உயிர்துறந்ததும் அரசி

கோப்பெருந்தேவியும்

" கணவனை இழந்தோர்க்குக்

காட்டுவது இல், என்று தன் உயிர்

துறந்து, அரசனின் உயிரைத்

தேடிச்சென்றனள்"என்றார்

இளங்கோவடிகள்.


ஆனால் .....

கோவலன் இறந்ததும் ,

கண்ணகி உயிர் துறக்கவில்லை.

உயிருடன் இருந்து பாண்டியன்

அவைக்குக் சென்று தன் கணவன்

கோவலன் கள்வனல்லன் என்று

வாதாடி, நீதியை நிலைநாட்டினாள்.


எனினும், சங்க இலக்கியங்கள்

கைம்பெண்கள் பற்றிக்

குறிப்பிடும்போது, அவர்கள்

கைம்மை நோன்பு

கடைப்பிடித்னர் என்று கூறுகின்றன.


நற்றிணை, புறநானூறு ஆகிய

இரு நூல்களில் மட்டுமே கைம்மை

பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.


கணவனை இழந்த பெண்களை,

ஆளில் பெண்டிர் (நற்.353)

கழிகல மகளிர் (புறம்,280)

பருத்திப்பெண்டிர் (புறம்.125)

தொடிகழி மகளிர் (புறம்.238)

கைம்மை (புறம்.125, 261)

படிவமகளிர் (நற்.273)

உயவற்மகளிர் (புறம்.246)

என்று அவர்கள் குறிப்பிடப்

படுகின்றனர்.


மனைவியை இழந்த ஆண்கள்

எங்ஙனம் வாழ வேண்டும்

என்ற வரைமுறை சங்க

இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.


மனைவியிழந்த ஆடவர்கள்

கைம்பெண்டிரைப் போன்று

தனித்தும், கைம்மைக்கோலம்(?)

பூண்டும் வாழவில்லை.


கணவனை இழந்தவர்கள்

கைம்மைத் துன்பம் நிறைந்த

வாழ்கையைவிட இறப்பதே

சாலச் சிறந்தது என்று

தனிச்சையாக முடிவெடுத்து

உயிர்துறந்தனர்

என்றும் அனுமானிக்கலாம்.


சங்க காலக் கைம்பெண்டிர்

மறுமணம் புரிந்துகொண்டனரா

என்பது குறித்து எந்தத் தகவலும்

சங்க இலக்கியங்களிள்

தென்படவில்லை.


கைம்பெண்கள் மறுமணம்

புரிந்துகொள்ள வேண்டும்

என்பதைத் தென்னகத்தில்

முதன்முதலாக வலியுறுத்தியவர்

பகுத்தறிவுப் பகலவன் #பெரியார்.


#பாவேந்தரும், கைப்பெண்டிரின்

மறுமணத்தை வலியுறுத்தி

ஏராளமான கவிதைகள்

வரைந்துள்ளார்.


இவர்களின் கனவைக் #கலைஞர்

தம் ஆட்சிக்காலத்தில்

நிறைவேற்றினார்.


டாக்டர் தருமாம்பாள் கைம்பெண்

மறுமணத்திட்டத்தை நடைமுறைப்

படுத்தினார்.


ஏராளமான கைம்பெண்கள்

வாழ்வில், பொட்டும் பூவும்

இல்லற வாழ்வும் பெற்று

இலங்குமாறு

மறுவாழ்வளித்தார் கலைஞர் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,.

சோம.நடராசன்,

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்,

”துலாக்கோல்” முகநூல்.

{14-04-2021}

-------------------------------------------------------------------------------------------------------------