name='description'/> தமிழ்க்கனி
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

புதன், 24 பிப்ரவரி, 2021

எதிர்நாயகன் சகுனி நல்லவனா ? கெட்டவனா ?

மகாபாரதத்தின் மிகமுக்கிய கதாபாத்திரங்களில் ஒன்பதாவதாக இடம்பெறுபவன் சகுனி !

 

எதிர்நாயகன் இவர் என்றாலும் அவனிடமும் சில நற்குணங்கள் இல்லாமற் போகாது என்று கூறத் தோன்றுகிறது.பகடை உருட்டுவதில் பண்பு மாறாதவன் சகுனி அவனிடமிருந்தும் இது போன்ற நற்பண்பு(!?) ஏதேனும் இருந்தால் கற்றுக்கொள்ளலாமே !?

 

சகுனியின் குணம் வெறுப்படையத்தக்கதே என்று பலர் எண்ணினாலும் அவனிடமும் பொறுப்பான ஒன்று இருக்குமல்லவா?

 

முதலில் இவன் இறைப்பற்றாளன் ! இராமாயண இராவணனைப் போன்றே  சகுனியும் சிவனியச்  சிந்தையாளன்தான் !

 

காந்தாரியின் உடன்பிறப்புதான் சகுனி . ஆனால், திருதராஷ்டிரனை, அதுவும், ஓர் அந்தகனை,உடன்பிறந்தாள் மணம் முடித்தபின் இயல்பாகவே தோன்றும் வெறுப்பும், வன்மக்குணமும் காந்தாரி பால் சகுனிக்குத் தோன்றியது . மேலும் ,சகுனிக்குத் தனது சகோதரி காந்தாரியிடம் எப்போதுமே இணக்கமான உறவும் இல்லை !

 

பாரதப் போர் உருவாக முக்கிய காரணமாக எப்படி #கபடவேடதாரி #கிருஷ்ணன் இருந்தானோ அப்படியே #சூதாடிச்_சகுனியும் அந்தப் போர் மூண்டதற்கு முக்கிய காரணியாவான் !

 

சகுனியின் தந்தை சுபலன் உட்பட சகுனியையும் அவனின் உடன் பிறப்புகளையும் காராக்கிரகத்தில் அடைத்துச் சித்திரவதை செய்தனர் கௌரவர்கள் !


அவர்களில் மிஞ்சியவன் சகுனி ஒருவனே ! கௌரவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதை சகுனிக்கு உணர்த்தவே அடையாளம் ஒன்றைச்சுபலன் சகுனியின் உடம்பில் உண்டாக்கினார். சகுனியின் கணுக்காலை உடைத்தார் !

 

சகுனியிடம் சொன்னார். இந்த ஊனம் உனக்கு எங்களின் இறப்பை ஞாபகப்படுத்தும். உன் கடமையை ஞாபகப்படுத்தும். கௌரவர்கள் உன் எதிரிகள்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற உன் கடமையை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இந்த ஊனம் உனக்கு உணர்த்தும்” !

 

தனது தந்தையின் ஆசைப்படி அவரது உடம்பின் எலும்பு பாகங்களால் செய்யப்பட்ட தாயக்கட்டையைத்தான் சகுனி எப்போதும்பயன் படுத்தி வந்தான். சொன்ன எண் விழுவதற்கு அதுவும் ஒரு காரணம்.


அந்த மந்திர எண்கள் விழக்காரணம் அவர் தன் இளமையில் அனுபவித்த துன்பங்களும் என்றும் கூறலாம் !

 

பீஷ்மரின் தலைமையில் காந்தார நாட்டை முற்றுகையிட்ட ஹஸ்தினாபுரத்தின் படை அங்கிருந்த அத்தனைபேரையும் சிறை பிடித்தது. அதில் சகுனியின் குடும்பத்தார் (அவரின் நூறு சகோதரர்களுடன்) அடக்கம் !

 

அவர்களுக்கு சிறையில் தினம் ஒரு குவளைக் கஞ்சி மட்டும் உணவாக தரப்பட்டது. நொந்துபோன அவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுத்தனர். யாரேனும் ஒருவர் மட்டும் அந்த உணவைச் சாப்பிட்டு உயிர்வாழ்வது என முடிவெடுத்தனர் !


அத்தனை பேராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவன்தான் சகுனி. பழிவாங்கும் குணம் அப்போதே விதைக்கப்பட்டது கௌவர்களைப் பழிவாங்கும் பொறுப்பும் அவன் தலைமீதே விழுந்தது !

 

உடனிருந்தே பழிவாங்கும் உத்தியைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் சகுனி வளர்ந்தான். கௌரவர்களின் நண்பனாய் தன்னை காட்டிக் கொண்டே தன் பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றினான் சகுனி !

 

பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தத்தில் அவமானப் படுத்தப்பட்ட துரியோதனன் மனமுடைந்து போயிருந்தான், பொறாமைத் தீயும், தாழ்வு மனப்பான்மையும் அவனுக்குள் நிரம்பி வழிந்தது. துரியோதனனின் உள்ள ஓட்டத்தை அறிந்த சகுனி தனது திட்டத்தை அவனிடம் தெரிவித்தான் !

 

"அறத்தின் நாயகன் தருமரிடம் ஒரு பலவீனமுள்ளது, அவருக்கு சூதாட்டம் மிகவும் விருப்பம். அவரை சூதாட்டத்தற்கு அழையுங்கள், மோசமான ஆட்டம் ஆடுபவராக இருந்தாலும் ஒரு சத்திரியன் சூதாட முடியாது என்று சொல்லமுடியாது"...... !

 

"அப்போது,உனக்குப் பதிலாக நான் ஆடுகிறேன். நான் பகடைக் சூதாட்டத்தில் ஆட்டத்தில் எவ்வளவு கெட்டிக்காரன் என்பது உனக்குத் தெரியும், நான் நினைக்கிறபடி தாயக்கட்டைகளை விழவைக்க முடியும், ஒவ்வொரு வெற்றியின் மூலம் பாண்டவர்கள் வைத்திருக்கும் பொன், மண், பொருள் எல்லாவற்றையும் வென்றுஉனக்குப் பரிசாகத் தருகிறேன்,


நீ இந்திரப்பிரஸ்தத்தின் மன்னனாக முடிசூட்டிக்கொள், பாண்டவர்கள் நாடிழந்து பராரியகி நிற்பார்கள்". என்றான் சகுனி !

 

இதைக் கேட்டதும். துரியோதனன் இரட்டிப்பு மகிழ்ச்சிடைந்தான்.


தான், இந்திரப்பிரஸ்தத்தில் பட்ட அவமானத்திற்குப்பழிக்கும் பழிவாங்குவதுடன் பாண்டவர்கள் அனைவரும் அவமானத்தால் கூனிக்குறு நிற்கப்போகிறார்கள், எறை இரட்டை மகிழச்சி , துரியோதனனுக்கு !

 

ஆனால், உண்மையில், தன் மாமன் தன்னுடைய கொளரவ குலத்தையே அழிக்கப் போகிறான் என்பதை அப்போது துரியோதனன் உணரவில்லை.பாண்டவர்களுடன் சூதாட்டம் தொடங்கியது !

 

ரதங்கள், சேனைகள், யானைகள், குதிரைகள், பணிப்பெண்கள், பணியாட்கள், நாடு என அத்தனையையும் சகுனியால் தருமரிடமிருந்து வெல்ல முடிந்தது !

 

பின்னர் பாண்டவர்களின் மனைவி, திரெளபதையைப் பணயம் வைத்து வென்றால், இழந்த அவ்வளவையும் திரும்பப் பெறலாம் என்றான் சகுனி.


தருமன் சற்றே தயங்கினான்...... !

 

ஆனால், சகுனி தனது சொல்லாற்றலால் பலவும் கூறி, "பந்தயத்தில் ஈடுபட்டபின் அதிலிருந்து பின்வாங்குவது சத்திரியனுக்கு அழகல்ல என்றும் உணர்த்தி, பாஞசாலியைப் பணயம் வைத்துச் சூதாட தருமனை இணங்க வைத்தான் !

 

பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் போன்றவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், நீதியின் மறு உருவமான, விதுரன்"இந்த விபரீதமான சூதாட்டத்தை நிறுத்துங்கள்" என்றார் !

 

அப்போது, திருதராஷ்டிரன் "நிறுத்தச் சொல்லக்ககூடாது, தருமர் ஒரு சத்திரியன், இந்திரபிரஸ்தத்தின் அரசன்,என்பதால் அவரே முடிவு எடுக்க தகுதியுள்ளவர் "என்றார் !

 

தருமத்தின் வாழ்வைத்தான் சூது கவ்வியே தீரும் அல்லவா,? சூதுகவ்விற்று  சகுனியின் பகடையால். பாண்டவர் நாடிழந்து வெளியேறினர் !

 

12 + 1 ஆண்டு வனவாசம், அஞ்ஞாதவாசம் புரிந்தனர்.....

 

மீண்டும் நாட்டைப்பெறக் "குருச்சேத்திரப் போர்" புரிந்தனர். நாட்டை மீட்டனர்' !

 

ஆனால் ,கெளரவகுலம் அழிய வழிவகுத்து அதைக் கண்ணால் கண்ட சகுனியும் 18 ஆம் நாள் போரில் உயிரிழந்தான் !

 

இலக்கை அடையத் திட்டமிடல், துன்பத்தைத் தாங்குதல்,செயல்படுத்தல், விடாமுயற்சியுடன் கூடிய செயல்திறன் இவை இருந்தால் ஒருவர் தன்னுடைய நோக்கத்தில் வெற்றியடையலாம் என்ற பாடத்தை, சகுனி நமக்கு உணர்த்துகிறான் எனக் கூறினால், அது மிகையாகாது !

 

சகுனி எதிர் நாயகனாக ஆக்கப்பட்டான். நம்மில் பலரும் அவ்வாறே ஆக்கப்படுகிறோம். அதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளப் போராடி, நம்மை வீழ்த்தியவர்களை வீழ்த்தி, வாழ்வதோ / வீழ்வதோ சரியே, என்பதைச் சகுனியின் பாத்திரம் நமக்கு உணர்த்துகிறது !

 

என்றாலும், "சகுனி நல்லவனா? கெட்டவனா?" நீங்கள் சொல்லுங்கள் என்று  கேட்டால், "நாயகன் வேலு நாயக்கர்" சொன்னது போன்று,"தெரியலையேப்பா !" என்று தான் கூற முடியும் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை



சோம.நடராசன்

{somanatarajan17@gmail.com}

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்

[தி.பி.2050: கும்பம் (மாசி) 12]

{24-02-2021}

------------------------------------------------------------------------------------------------------------